சமையல் எண்ணெயை உதிரியாக விற்பனை செய்வதற்கு ஐகோர்ட் இடைக்கால தடை

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சில்லறை வியாபாரிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. கலப்பட எண்ணெயும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே மக்களின் நலன் கருதி, சமையல் எண்ணெயை உதிரியாக விற்க தடைவிதித்தும், பேக்கிங் சமையல் எண்ணெயை மட்டுமே சந்தையில் விற்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:- சமையல் எண்ணெய் வகைகளில் பெரும்பாலும் கலப்படம் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சான்றுகளை சமர்ப்பித்து உள்ளனர். கலப்பட சமையல் எண்ணெயை விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமையல் எண்ணெய் மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்வு செய்ததில் 194 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. அவற்றில் 55 இடங்களில் விற்பனைக்கு வைத்திருந்த சமையல் எண்ணெய் மட்டுமே தரமானது என்பது தெரியவந்துள்ளது என்றும் அரசு வக்கீல் தெரிவித்து உள்ளார்.

சமையல் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு உள்ள டிரேடர்ஸ் மற்றும் டீலர்கள் வைத்துள்ள சமையல் எண்ணெய் கேன்களில் 60 முதல் 200 கேன்கள் வரை கலப்பட எண்ணெய் வைத்து இருப்பதை அரசு தரப்பு உறுதிப்படுத்துகிறது. அத்தியாவசிய பொருளான சமையல் எண்ணெயில் கலப்படம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை உதிரியாக விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. கலப்பட எண்ணெய் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வருவதுதான் கலப்பட எண்ணெய் விற்பனையை தடுப்பதில் தொடக்க நடவடிக்கையாகும். எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் எத்தனை உள்ளன என்று மாவட்டம் வாரியாக விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணெயின் தரம் குறித்து எத்தனை பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதும், இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் மாவட்ட வாரியாக பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.