மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நோய் தொற்று குறைந்த பின் தொடங்கும்; முதல்வர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று இருக்கும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழு அந்த பகுதிக்கே சென்று அங்குள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிகுறி இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து அதில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இது நல்லமுறையில் குறைந்தால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கல்லூரி அமைப்பது தான் அரசின் எண்ணம். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்திலும் மருத்துவ கல்லூரி தொடங்க சுகாதாரத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் காஞ்சிபுரத்திலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்.

அறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் விரைவாக நடத்தப்படும். கடைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதும் பட்டு சேலை விற்பனை அதிகரிக்கும்.

தமிழக நகரங்களை சுத்தமாக்குவதற்காக எல்லா பெருநகரத்திலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. சாலைகள் செப்பனிடுதல், தெருவிளக்கு வசதிகள், பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.