கடத்தல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் பினாமி பெயரில் முதலீடு

பினாமி பெயரில் பல கோடி ரூபாய் முதலீடு... கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கில் சொப்னாவும், அவருக்கு உதவி செய்த கும்பலும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

இவர் முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர். ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்த மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில், சிவசங்கரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், சாப்பிடாமலும் சிவசங்கர் முரண் பிடித்து வருவதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் இருந்து தப்பிக்கவே அவர் இவ்வாறு செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனிடையே சிவசங்கரின் சொத்துக்களை முடக்குவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தங்க கடத்தல் வழக்கில் கைதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் நாகர்கோவிலில் இருக்கும் காற்றாலை நிறுவனத்தில் பல கோடி முதலீடு செய்திருக்கிறார் என்பது அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக ஆடிட்டர் வேணுகோபாலிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பினாமி பெயரில் அவர் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.