இஸ்ரேல் மீது ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் பொருளாதார தடை விதிக்க ஈரான் அழைப்பு

தெஹ்ரான்: பொருளாதார தடை விதிக்க வேண்டும்... பாலஸ்தீனத்தில் கொடூர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் பொருளாதார தடை விதிக்க வேண்டும்; அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் தூதர்களை வெளியேற்ற வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ், அக்டோபர் 7-ந் தேதி பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர் ஹமாஸ் ஜிஹாதிகள். இதனால் உலக நாடுகள் ஒருசேர அதிர்ந்தன.

இதனையடுத்து ஹமாஸின் காஸா நிலப்பகுதி மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தது. காஸாவில் இருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியது இஸ்ரேல். இந்நிலையில் திடீரென நேற்று இரவு காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரமான விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட துயரம் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கின. பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் தூதரகங்கள் முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனிடையே ஒட்டுமொத்தமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளுமே, இஸ்ரேல் மீது பொருளாதார தடையை அறிவிக்க வேண்டும்; அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்து இஸ்ரேலிய தூதர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஓஐசி எனப்படும் Organisation of Islamic Cooperation- இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. இதனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான பதற்றம் தொடருகிறது.