ஈரானில் 3 வாலிபர்களின் மரண தண்டனை நிறுத்தப்பட்டு மறு விசாரணைக்கு உத்தரவு

ஈரான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் விலையை உயர்த்தியபோது, வறுமை, பணவீக்கம், பொருளாதார முறைகேடு ஆகியவற்றை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். பாதுகாப்பு படையினரால் இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த போராட்டத்தின்போது, அமீர்ஹோசின் மொராடி, முகமது ராஜாபி, சயீத் தம்ஜிடி என்னும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த மரண தண்டனைக்கு எதிர்ப்பு கிளம்பியது.

‘மரண தண்டனையை செயல்படுத்தாதே’ என்ற தலைப்பில் சமூக ஊடகத்தில் ‘ஹேஷ்டேக்’ உருவாக்கி, அதை 75 லட்சம் முறை பயன்படுத்தி மக்கள் தங்கள் எதிர்ப்பை ஒருமித்த குரலில் பதிவு செய்தனர் அதன்படி, 3 பேரின் மரண தண்டனையும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கின்ற நிலையிலும், ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை தரும் வழக்குகளை நிறுத்தவில்லை. தற்போது போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட 3 பேரின் மரண தண்டனையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.