கொரோனா பரவலை தடுக்க மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகுவது சாத்தியமா - ஸ்பெயினில் ஆய்வு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகளவில் 1 கோடியே 16¼ லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 5.38 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

பல் நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தாலும், அவர் இன்னும் சோதனையிலே உள்ளன. இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்று அழைக்கப்படுகிற மந்தை எதிர்ப்பு சக்தி கொரோனாவிற்கு தீர்வு ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. தடுப்பூசி கண்டுபிடித்து மொத்த மக்கள் தொகையில் 70 முதல் 90 சதவீத மக்களுக்கு அதை செலுத்தி மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகி, மற்றவர்களுக்கு பரவுதை தடுக்க முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தடுப்பூசி சாத்தியம் இல்லாதநேரத்தில், பெரும்பாலான மக்களுக்கு நோயை பரவவிட்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். ஆனால் நோயின் வீரியம் தெரியாமல் பரவ விட்டால் அது ஆபத்தில் முடியலாம். தற்போது, கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகுமா என ஸ்பெயின் நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நடத்திய ஆய்வில் வெறும் 5 சதவீத மக்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்திஉருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஸ்பெயினில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், பரவலான மதிப்பீடுகள் குறைவாகவே உள்ளன. இது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.