ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேருக்கு ஆயுள் தண்டனை

பரூச்: ஆயுள் தண்டனை வழங்கல்... ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இரு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் மாநிலத்தில் உள்ள அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அந்த மாநிலத்தின் அங்கலேஷ்வரில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஆய்வகத்தில் பணியாற்றிய முகமது காசிம் ஸ்டிம்பா்வாலா, சூரத் மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றிய உபைத் அகமது மிா்ஸா ஆகிய இருவரும் ஐ.எஸ். அமைப்புடன் தொடா்பில் இருந்து வந்தனா்.

பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் வகையில் இளைஞா்களைத் தோவு செய்தது, பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடா்பாக, அவா்கள் இருவரையும் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு படை கடந்த 2017-இல் கைது செய்தது.

இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ் 120-பி (குற்றச் சதி), 121-ஏ (தேசத் துரோகம்) உள்ளிட்ட பிரிவுகள், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா) ஆகிய சட்டங்களின்கீழ் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு அங்கலேஷ்வரில் உள்ள அமா்வு நீதிமன்றத்தின் கூடுதல் அமா்வு நீதிபதி வி.ஜெ.கலோத்ரா முன்பாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 75 சாட்சிகள், பென் ட்ரைவ், கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டு, பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக அவா்கள் இருவரும் சிரியாவுக்குத் தப்பிக்க இருந்தது நிரூபணமானது.

இதன் அடிப்படையில், 'கடைசி மூச்சு வரை' இருவரும் சிறையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீா்ப்பு அளித்ததாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் பரேஷ் பாண்டியா தெரிவித்தாா்.