தேர்தலுக்கு பின்னரே கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி?

தேர்தலுக்கு பின்னர்தான் தடுப்பூசி... அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் அங்குள்ள நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து விடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகிறார்.

இதற்காக தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு திட்டத்தின்படி அனுமதி வழங்கவும் தயார் என அரசாங்கம் அறிவித்தது. அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டை அங்கீகரிப்பதற்கு குறைந்தது 2 மாத பாதுகாப்பு தரவுகளை வழங்கும்படி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், தடுப்பூசியை உருவாக்கும் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இல்லை எனவும், தேர்தலுக்கு பிறகே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.