தீபாவளிக்கு திரையரங்குகள் திறப்பது சாத்தியமில்லாத நிலை

திரையரங்குகள் திறக்கப்படுமா? தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகள் திறக்கப்பட முடியாத சூழல் நிலவி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நவ.,30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதனால், தீபாவளிப் பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால், VPF கட்டணத்தை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரைப்படங்களின் 50 % வசூலை அளிக்க முன்வந்தால், VPF கட்டணத்தை பெறுவதை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டுவதற்காக இருதரப்பினரும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், தீபாவளிக்கு திரையரங்குகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.