ஆம்னி பேருந்து கட்டணம் 30 சதவீதம் வரை தீபாவளியை ஒட்டி குறைக்கப்படும் என்று தகவல்

சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம் 30 சதவீதம் வரை தீபாவளியை ஒட்டி குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இருந்தே துணி மற்றும் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டு வருகிறது. மேலும், தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வரும் நவ.9 ஆம் தேதியிலிருந்து 16000 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளது.

இதனை அடுத்து பெரும்பாலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

அதிலும், குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் ரூ.4,000 வரைக்கும் கூட பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எனவே இதன் அடிப்படையில், தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்து நிர்வாகம் நிர்ணயித்த விலையை காட்டிலும் 30% வரை விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.