சென்னையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது போன்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை இருக்கிறது. மாநிலத்தில் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கையில் பாதி அளவு சென்னை மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் பல மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கொரோனா 4 ஆம் அலையை தடுக்கும் நோக்கில் சென்னை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

எனவே கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்துவதே கொரோனாவை தடுக்க ஒரே வழி எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.