நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஜெசிந்தா ஆர்டன் அமோக வெற்றி

அமோக வெற்றி... நியூசிலாந்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அமோக வெற்றிபெற்றுள்ளார்.

ஜெசிந்தா ஆர்டன் எனும் இந்த பெயர் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த சூழலில், நிச்சயம் உலக மக்கள் அனைவரது செவிகளுக்கும் எட்டி இருக்கும். பல வல்லரசு நாடுகளும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த திக்கு முக்காடிய நிலையில், நியூசிலாந்தில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

முன்னதாக, கர்ப்பமாக இருந்த போதும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையும் பிரபலமானது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, 50 சதவீத வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அவர் முன்னெடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாகவே அவருக்கு இந்த வெற்றி சாத்தியமானதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அழுத்தந் திருத்தமாக முடிவெடுக்கும் தலைமைப் பண்பு, நெருக்கடிகளை திறமையாகக் கையாள்வது, இயல்பாக பழகும் தன்மை ஆகிய அம்சங்கள் ஜெசிந்தாவுக்கு நியூசிலாந்தை தாண்டி புகழைப் பெற்றுத் தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தேர்தல் வந்ததன் பிறகு, தனியொரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவை சிறப்பாக கையாண்ட தலைவர்களில், உலக அளவில் முக்கியதத்துவம் பெற்ற ஜெசிந்தா மீண்டும் நியூசிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு, பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருக்கின்றன.