ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15 பேர் பலி; 6 பேர் மாயம்

ஜப்பானில் வெள்ளப்பெருக்கில் 15 பேர் பலி... ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக ஏறக்குறைய 15 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏறக்குறைய 14 பேர் வெள்ளப்பெருக்கு இடம்பெற்ற மருத்துவ மையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், இறப்பு விபரங்கள் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஏறக்குறைய இரண்டு இலட்சம் பேரை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் ஏறக்குறைய 10 ஆயிரம் படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜப்பானில் நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவும் தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நாட்டு மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.