உயிருக்கு அச்சுறுத்தல் என கூறி நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி: விசாரணை நடத்த அதிபர் ரணில் உத்தரவு

கொழும்பு: விசாரணை நடத்த உத்தரவு... இலங்கையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக, விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத் தீவு மாவட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சரவண ராஜா. முல்லைத்தீவு மாவட்டம் குருந்துார் மலையில் அமைந்திருந்த அய்யனார் கோவிலை அகற்றிவிட்டு புத்த விஹாரம் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் நீதிபதி சரவண ராஜா தீர்ப்பளித்தார். அப்போது, புத்த விகாரத்தை அகற்றும்படி அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து, நீதிபதி சரவண ராஜாவுக்கு தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்துள்ளன.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து தீர்ப்பை மாற்றி வழங்குமாறு அழுத்தம் தரப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நீதிபதி சரவண ராஜா, தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தை நீதி சேவை ஆணைக்குழுவின் செயலருக்கு அனுப்பி வைத்தார்.

இதன்பின், அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, நீதிபதி ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார்.