கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் வழங்கிய தீர்ப்பு ஐகோர்ட் கருத்து

சென்னை: சென்னை ஐகோர்ட்டின் கருத்து... கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி, தற்கொலை கடிதம், சக மாணவியின் சாட்சி அடிப்படையில் மாணவி வேதியல் பாடத்தில் சிரமப்பட்டுள்ளார் என தெரிகிறது.


இரு ஆசிரியர்களும் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததும் தவறு என தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை நன்றாக படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல. தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகிறது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.