சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக தீவிர அரசியலில் ஈடுபட்டும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணிகளை தொடங்கி உள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக சமீபகாலமாக வாரா வாரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வந்ததால் கமலின் திட்டங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும் வீடியோ கால் மூலமாக பேசும் வசதியால் கமல் நிர்வாகிகளுடன் இன்னும் நெருக்கமாகி வருகிறார். ஓய்வில் இருப்பதால் வாரா வாரம் நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். ஒவ்வொரு வார கூட்டத்திலும் நிர்வாகிகள் புதுப்புது வி‌ஷயங்களை தான் பேசவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டு அவற்றை முடிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்படுகிறது. பிரசார குழுவின் திட்டங்கள், செயல்பாடுகள், கட்சியின் அடிப்படை கட்டமைப்பு ஆகியவை முக்கியமாக பேசப்படுகின்றன. பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வீடியோ கால் மூலமாக நடத்தப்படுகிறது. பிரசார பிரிவில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொரு தொகுதியாக சென்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அந்தந்த தொகுதிகளில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன, மக்கள் நீதி மய்யத்துக்கு எந்தெந்த தொகுதிகளில் சாதகமான சூழல் உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் எந்த அளவுக்கு அந்த தொகுதி சார்ந்த பிரச்சனைகளில் செயல்பட்டுள்ளனர், யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது போன்ற பல்வேறு விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். கட்சியின் பிரசார வியூகங்களை வகுக்க துணை தலைவர் மகேந்திரன் தலைமையில் பிரசார பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.