மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் தகவல்

கர்நாடகா: மறு சீராய்வு மனுதாக்கல்... காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையை தெரிவித்தார்.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதல்வர் சித்தராமையை இதைத் தெரிவித்தார்.

காவிரி ஒழுங்கு முறை ஆணையம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கர்நாடகம் கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதுமான தண்ணீர் இல்லை என்றும் எனவே ஆணையம் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கர்நாடகம் வலியுறுத்தியுள்ளது.

மறு ஆய்வு மனுவில், “ எங்களிடம் போதுமான தண்ணீர் இல்லை. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது” என்று குறிப்பிடப் போவதாகவும் கர்நாடகம் தெரிவித்துள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இருவரும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் மற்றும் நீர்ப்பாசன நிபுணர்களைக் கலந்து ஆலோசித்ததை அடுத்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராஜ் பாட்டீல், ரவீந்திரா, விஸ்வநாத் ஷெட்டர் மற்றும் கோபால் கெளட உள்ளிட்ட நிபுணர்களை அவர்கள் சந்தித்தனர். இந்த கூட்டத்தில் ஆலோசனைக்குழு ஏற்படுத்துவது, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுப்பது போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், விவசாயத்துறை அமைச்சர் செல்வராயசாமி, முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜு, அரசியல் ஆலோசகர் நஸீர் அகமது மற்றும் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக காவிரியிலிருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும் காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.