வலுக்கும் மோதல்... வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் நீக்கம்

கேரளா: கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வலுவடைந்து வரும் நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கியுள்ளது பினராய் விஜயன் தலைமையிலான அரசு. இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் நீக்கப்பட்டதாக கேரள அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை கலாச்சாரத்துறை சார்ந்த தகுதி வாய்ந்த நபர் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மோதல் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கேரளா அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது.