தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க கேரளா உயர்நீதிமன்றம் மறுப்பு

கேரளா: தடை விதிக்க மறுப்பு... விபுல் ஷா தயாரித்து, சுதிப்தோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு கேரளா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்து பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு அனுப்புவதாகவும், கேரளாவை சேர்ந்த பல பெண்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு கண்டனம் மற்றும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், படத்திற்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகரேஷ், சோபி தாமஸ் தலைமையிலான அமர்வு, படத்தை திரையிட தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘வெறும் படத்தை திரையிடுவதால் ஒன்றும் ஆகாது. இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.

இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. படத்தில் எந்த சமூகத்துக்கும் எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இல்லை. படத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்து இல்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன.

கேரள சமூகம் மதச்சார்பற்ற இயல்புடையது. ஏற்கனவே, இந்து சாமியார்கள், கிறிஸ்துவ பாதிரியார்களை விமர்சித்து படங்கள் பல வந்துள்ளன. அதையெல்லாம் கதைகளாக பார்க்கும் போது இதில் என்ன பிரச்னை” எனக் கூறி தீர்ப்பில் தெரிவித்துள்ளது.