தண்ணீர் தொட்டி கட்ட நிலம் வழங்கிய விவசாயிக்கு பாராட்டு

மத்திய பிரதேசம்: விவசாயியின் அட்டகாச செயல்...57 வயதான பழங்குடி விவசாயி தென்கு பிரசாத் பன்வாசி என்பவர் தண்ணீர் தொட்டி கட்ட தனது 1000 சதுர அடி இடத்தை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளார்.


மத்தியப் பிரதேசம், திண்டோரி மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சார்ந்த தென்கு பிரசாத் பன்வாசி என்ற விவசாயி கிராமத்தின் குடிநீர் பிரச்சினை போக்க தனது இடத்திலிருந்து 1000 சதுர அடி இடத்தை பொது சுகாதர பொறியியல் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளார். ஷாஹ்புரா ஊராட்சி, பார்கோன் கிராமத்தில் உள்ள 4500 மக்களுக்கு இது உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்கோன் கிராமத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் 2.3 கிலோ மீட்டர் தூரம் சென்று குழந்தைகளும் பெண்களுமாக சென்று சல்கி ஆற்றிலிருந்து நீரை எடுத்து வரவேண்டி இருந்தது குறிப்பிட்டத்தக்கது.

இது குறித்து தென்கு பிரசாத் கூறியதாவது: சிறிய வயதிலிருந்தே இந்த நிலத்தில் இருந்துதான் கால்நடைகளை வளர்த்து வந்தேன். இந்த நிலம் எனது குடும்பத்தை காப்பாற்ற உதவியாக இருந்தது. இந்த கிராமத்தின் தண்ணீர் பற்றாக்குறையை ஒப்பிடும்போது எனது குடும்பம் இரண்டாம் பட்சமாக தெரிகிறது.

எனது இடத்தில் தண்ணீர் தொட்டி கட்ட தானமாக அளிப்பதில் மகிழ்ச்சிய அடைகிறேன். இதன் மூலம் மக்களின் நீண்டநாள் தண்ணீர் பிரச்சினை தீரும். மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் உடன் முறையிட்டேன். தண்ணீர் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.


“1000சதுர அடி நிலத்தை குழாய் நீர் திட்டத்திற்காக தானமாக அளித்த தென்கு பிரசாத் பன்வாசியின் செயல் மதிப்பிற்குரியது. அவரது முயற்சிக்கு தலை வணங்குகிறேன் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.