லடாக் யூனியன் பிரதேச பாஜக தலைவராக ஜம்யங் செரிங் நாம்க்யால் எம்.பி. நியமனம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். அப்போது மாநிலங்களவையில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது.

விவாதம் நடைபெற்றபோது, ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு, லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக பேசினார். 70 ஆண்டுகளாக லடாக் மக்கள் இதற்காக போராடி வருவதாகவும், லடாக் தற்போது வளர்ச்சியின்றி இருக்கிறது என்றால் அதற்கு 370 சட்டப்பிரிவும், காங்கிரஸ் கட்சியும்தான் முழு காரணம் என ஜம்யாங் செரிங் கூறினார்.

மெகபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் காஷ்மீரை தங்கள் மூதாதையர் சொத்து என நினைக்கின்றனர். அது உண்மை அல்ல என ஜம்யாங் செரிங் நம்கியால் மாநிலங்களவை விவாதத்தின் போது கூறினார். அவரது பேச்சுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்பட பலர் வரவேற்பு அளித்திருந்தார்.

அதன்பின், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக ஜம்யாங் செரிங் உருவெடுத்தார். தற்போது, எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யாலை லடாக் யூனியன்பிரதேச பாஜக தலைவராக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. லடாக் பாஜக தலைவராக தம்மை தேர்ந்தெடுக்க காரணமான அனைவருக்கும் ஜம்யங் நன்றி தெரிவித்துள்ளார்.