லடாக் மோதலின் போது சீன அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

லடாக் எல்லையில் கடந்த 15-ஆம் தேதி சீன-இந்திய ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் மோடி வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அப்போது உரையாற்றிய அவர், இந்தியா தனது எல்லையையும், அதன் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்ற நிலையை உலகம் கண்டுள்ளது. லடாக்கில் நமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களுக்கு தக்கபதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அவர், 2020 ஆம் ஆண்டு எப்போது நிறைவடையும் என மக்கள் பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருப்பதாகவும், இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்ததாக உள்ளது என மக்கள் நினைப்பதாகவும் கூறினார்.

சவால்கள் அதிகமாக இருக்கலாம் ஆனால் நாம் இந்த சவால்களில் இருந்து மீண்டு வரலாம் என்பதை நமது வரலாறு நமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த சவால்களுக்கு பின்னர் நாம் மிகவும் வலிமையாக முன்னேறி வருவோம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.