லாகூரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; 24 பேர் பலி

லாகூரில் பெய்த கனமழையால் நேற்று ஒரே நாளில் 24 பேர் பலியாகினர், 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. அதிக மக்கள் தொகைக் கொண்ட மாகாணமாக லாகூர் மாகாணம் உள்ளது. இங்கு கிட்டத்திட்ட 1.30 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில் லாகூர் மாகாணம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. நாட்டின் கலாச்சார மையமாக திகழும் லாகூரின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின, நகரத்தின் தாழ்வான பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. ஒரே இரவில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவசர சேவை செய்தித் தொடர்பாளர் முகமது அஸ்கர் கூறுகையில், இறந்தவர்களில் பெரும்பாலானோர் குடிசை வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்கள்.

லாகூரில் உள்ள கிராமப்புறத்தில் பல வீடுகள் வெயிலால் சுட்ட மண் மற்றும் வைக்கோல் அல்லது மெலிந்த சிண்டர் பிளாக் கட்டுமானத்தால் கட்டப்பட்டது. அதனால் தான் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது என கூறினார்.