கேரள... ரேசன் கடைகளில் கோதுமை பதிலாக ராகி, பருப்பு ,கொண்டை கடலை வழங்க அனுமதி ... மத்திய அரசுக்கு கடிதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பழங்குடி இன மக்களில் பலருக்கும் ரத்த சோகை நோய் இருப்பது தெரியவந்தது.

இதற்கு சத்தான உணவு வகைகள் இல்லாததால் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து மலையோர மக்களுக்கு சத்தான ராகி, பருப்பு மற்றும் கொண்டை கடலை வகை உணவுகளை வழங்க ஆய்வு குழுவினர் சிபாரிசு செய்தனர்.

மேலும் சுகாதார குழுவினர் அளித்த ஆய்வறிக்கையின்படி கேரள அரசு மலையோர கிராம மக்களுக்கு ராகி வகை உணவு வகைகளை வினியோகிக்க முடிவு செய்தது. தற்போது கேரள ரேசன் கடைகளில் மத்திய அரசு வழங்கும் கோதுமை வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பதிலாக ராகி, பருப்பு மற்றும் கொண்டை கடலை வகை உணவினை ரேசன் மூலம் வழங்க அனுமதிக்க வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. முதல் கட்டமாக இந்த உணவு பொருள்களை கேரளாவின் வயநாடு, இடுக்கி மற்றும் பாலக்காடு போன்ற 3 மாவட்டங்களில் அறிமுகம் செய்ய கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த மாவட்டங்களில் தான் ரத்த சோகை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் கோதுமைக்கு பதில் ரேசன் கடைகளில் ராகி வினியோகிக்க தேவையான ராகி மற்றும் கொண்டை கடலை வகைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது.