தமிழகத்தில் மதுபான பார்கள் 18-ந் தேதி முதல் திறக்கப்பட வாய்ப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுபான பார்கள் இதுவரை திறக்கப்படவில்லை.

மதுபான பார்களை திறக்க வேண்டும் என்று அதனை நடத்துபவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள மதுபான பார்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிமான மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் உள்ளன. அந்த பார்கள் வருகிற 18-ந் தேதி முதல் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுபான பார்கள் திறக்கப்படும் பட்சத்தில் அங்கு கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க உத்தரவிடப்படும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.