மதுவாங்க செருப்பை போட்டு வரிசையில் இடம் பிடித்த குடிமகன்கள்

செருப்பை போட்டு வரிசையில் இடம் பிடித்த குடிமகன்களை கண்டு பொதுமக்கள் தலையில் அடித்து கொண்டுள்ளனர்.

திருச்சி மாநகரில் மது வாங்குவதற்காக மதுக் கடைகளில் சமூக இடைவெளிக்காக அடையாளமிடப்பட்டிருந்த வட்டங்களில் மதுப்பிரியர்கள் தங்களது காலனிகளை வைத்து இடம் பிடித்து காத்திருந்த சம்பவம் வைரலாகி உள்ளது.

ஊரடங்கால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று முதல் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து சென்னையை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 63 கடைகள் ஊரகப் பகுதியில் 100 கடைகள் என மொத்தம் 163 கடைகள் மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 20 கடைகள் கரோனா கட்டுப்பாடுகளுக்குள் வருவதால் அந்த கடைகளை திறக்க அனுமதியில்லை.

இந்தநிலையில், இன்று அதிகாலையே மதுக்கடைகளை நோக்கி மதுப் பிரியர்கள் படையெடுக்கத் தொடங்கினர். கடை திறப்பதற்கு முன்பே கடைக்காக வரிசையில் நிற்க தொடங்கினார்கள். திருச்சி மாநகரில் புத்தூர் நான்குசாலை பகுதியில் உள்ள கடைகளில் சமூக இடைவெளிக்காக அடையாளமிடப்பட்டிருந்த வட்டங்களில் மதுப்பிரியர்கள் தங்களது காலணிகளை வைத்து இடம் பிடித்து காத்திருந்தனர். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.