சாகித்ய விருதுகளை திரும்ப பெற இயலாது; சாகித்ய அகாடமி தகவல்

திரும்ப பெற முடியாது... விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய விருதுகளை எழுத்தாளர்கள் திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ள நிலையில், விருதுகளை திரும்பப் பெறும் நடைமுறை விதிகளில் இல்லை என சாகித்ய அகாடமி மீண்டும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பஞ்சாபில் 15-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

தொடரும் இப்பட்டியலில், பஞ்சாபின் பிரபல எழுத்தாளர்களில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷிவ்ராஜ் வீர், ஓய்வு பெற்ற பேராசிரியர் கவிஞர் மோஹன் ஜித், டாக்டர் ஜஸ்வேந்தர் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மத்திய அரசை கண்டித்து விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் முயற்சி கடந்த 2015-ல் தொடங்கியது. அப்போது, மாட்டுக்கறி வைத்திருந்ததாக நொய்டாவில் இக்லாக் அகமது என்பவர் கொல்லப்பட்டது, மதக்கலவரம், பிரபல முற்போக்கு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் இதற்கு காரணமாயின.

எழுத்தாளர்களில் பலர் டெல்லியில் உள்ள சாகித்ய அகாடமி தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து விருதுகளை ஒப்படைத்தனர். மேலும் சிலர் தபாலில் விருதுகளையும் அதற்கான பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு 50-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து பெற்றுக் கொண்ட சாகித்ய அகாடமி அலுவலகம், அது தொடர்பாக தனது நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதித்தது. இதில் ஒருமுறை அளித்துவிட்ட விருதை திரும்பப் பெறும் நடைமுறை அகாடமியின் சட்டதிட்டங்களில் இல்லை என்பதால் அதை பெற்றுக்கொள்ள முடியாது என முடிவு செய்தது. இத்தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு, ஒப்படைத்த விருது மற்றும் காசோலைகளை திரும்ப பெற்றுச் செல்லுமாறு தகவல் அனுப்பியது.

இதுகுறித்து சாகித்ய அகாடமி பொதுச் செயலாளர் கே.நிவாசன் ராவ் கூறும்போது, 'எங்கள் தகவலை ஏற்றுக் கொண்டு இதுவரை ஒருவர் கூட தங்கள் விருதுகளையும், காசோலைகளையும் திரும்பப் பெற்றுச் செல்லவில்லை. இதனால், அவர்கள் வந்தால் கொடுப்பதற்காக விருதுகளை பாதுகாத்து வைத்துள்ளோம். விருதாளர்கள் அளித்த காசோலைகள் எங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை' என்றார்.