சென்னையை மிரட்டி எடுக்கும் மெட்ராஸ் ஐ கண்நோய்

சென்னை: மிரட்டும் மெட்ராஸ் ஐ... சென்னையில் நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை கண் நோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 4000 முதல் 4500 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: இந்த ஆண்டும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் குறிப்பாக செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பாதிப்பு கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்களில் உள்ளன.


எழும்பூர் கண் நோய் மருத்துவமனையைப் போன்று, ஸ்டான்லி, கேஎம்சி, ராயப்பேட்டை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்பட 10 இடங்களில் இந்த கண் நோய்க்கான மருத்துவம் பார்க்கப்படுகின்றன.

சென்னையில் உள்ள 10 இடங்களிலும், நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 4000 முதல் 4500 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள் உள்பட 90 இடங்களில் அரசு கண் நோய் மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன.வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாள்முதல், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதில் யாருக்கும் பார்வை இழப்பு என்கிற வகையில் பாதிப்புகள் இல்லை. இந்த பாதிப்பு கண்ணின் வெள்ளை விழிப்படலத்தில் வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்பாகும்” என்று அவர் கூறினார்.