மகாராஷ்டிராவில் ஆட்சியை சரத்பவார் தான் நடத்துகிறார் - சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. மகாராஷ்டிர முதல் மந்திரியாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்ததால் பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று முன்தினம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது கவர்னர் இந்த விவகாரம் தொடர்பாக சரத்பவாரை சந்திக்குமாறு ராஜ் தாக்கரேயிடம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி அளித்தபோது, கவர்னர் என்ன கூறினார் என எனக்கு தெரியாது. ஆனால் என்னிடம் கேட்டால், சரத்பவார் தான் மாநிலத்தை நடத்துகிறார் என கூறுவேன். உத்தவ் தாக்கரேயை சந்திப்பதால் என்ன பலன்?. சரத்பவார், தேவேந்திர பட்னாவிசை எளிதில் சந்திக்க முடியும் என்று கூறினார்.

மேலும் அவர், எனவே மக்கள் முதல்-மந்திரியை ஏன் சந்திக்க வேண்டும் என நினைக்கின்றனர். கடந்த 9 மாதங்களாக முதல்-மந்திரிக்கு பல கடிதங்கள் எழுதி உள்ளேன். அதில் ஒன்றுக்கு கூட பதில் வரவில்லை என சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.