மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மலேசிய பிரதமரின் மனைவிக்கு பத்தாண்டு சிறையும் 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி ரோஸ்மா மன்சோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தம்பதியருக்கு சொந்தமான சொத்துகளில் 12,000 தனிப்பட்ட நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 423 கைக்கடிகாரங்கள் மற்றும் 26 மில்லியன் டாலர் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.

மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டு பெற்றதற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும், 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் முன்னாள் பிரதமரின் மனைவிக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை மலேசிய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை விதிக்கப்படாத அளவு மிகப் பெரிய அபராதத் தொகையாகும். அரசுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் தரப்பை நிரூபித்துள்ளது என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லான் கூறினார்.

70 வயதான மன்சோரின் கணவரும், முன்னாள் பிரதமருமான நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள்ள நிலையில், ரோஸ்மா ஜாமீனில் உள்ளார் இரண்டு உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து தோல்வியடைந்தால், இனிமேல் அவர் சிறையில் இருக்க வேண்டும்.

ஆடம்பரமாக வாழ்ந்து வந்த முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு, சிறை தண்டனை பெரிதும் சிரமமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது, எப்போதும் விலையுயர்ந்த கைப்பைகளை வைத்திருப்பதையும், வைர நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வதும் ரொஸ்மாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

நஜிப் ரசாக் பிரதமராக இருந்தபோது ரோஸ்மா மன்சோர், நூற்றுக்கணக்கான விலையுயர்ந்த ஹெர்மிஸ் பர்கின் கைப்பைகளை சேகரித்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. பர்கின் பைகள் ஒன்றின் விலை லட்சக்கணக்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அரிதான மற்றும் விலையுயர்ந்த வைர நகைகளை வாங்குவதும் ரோஸ்மா மன்சூருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.


மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாடில் (1MDB) நடந்த பல பில்லியன் டாலர் ஊழல் தொடர்பாக 2018 தேர்தலில் நஜிப் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார். தற்போதைய விசாரணையில் ஊழல் பற்றிய பல விவரங்கள் வெளிவந்துள்ளன. $27 மில்லியன் இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் உட்பட, $4.5 பில்லியன் மதிப்பிலான லஞ்சப் பணத்தில் மன்சோருக்கு விலையுயர்ந்த நகைகள் வாங்கப்பட்டதாக அமெரிக்க மற்றும் மலேசிய புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.