மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மம்தா பானர்ஜி உத்தரவு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு இருந்ததால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொருளாதார சிக்கல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பலவிதமான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது மாநிலத்துக்கு ஏற்றவாறு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றன. கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்குள் வராததால் ஒவ்வொரு தளர்வின் போதும் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பல்வேறு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.

மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 1-ந்தேதி முதல் 50 பார்வையாளர்கள் அல்லது அதற்கும் குறைவானவர்கள் பார்க்கும் வகையில் சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. திறந்தவெளி தியேட்டர்களையும் திறந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இதேபோல இசை மற்றும் நடன குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக இடை வெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.