மாணவர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்தவர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். எனினும் சிலர் மறைமுகமாக போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த தகவலை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கட்டையன்விளை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 55) என்பது தெரியவந்தது.

பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒரு பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மேலும் ஒரு பையில் சுமார் 10 போதை ஊசிகள் போதை மருந்துடன் இருந்தன. கஞ்சா மற்றும் போதை ஊசிகளை பாலகிருஷ்ணன் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சா மற்றும் போதை ஊசிகள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

போதை ஊசிகள் பாலகிருஷ்ணனுக்கு எப்படி கிடைத்தது? அதை எங்கிருந்து வாங்கி வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போதை ஊசிகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.