வீட்டை கட்டிக்காக்கும் பெண்களுக்கு சம்பளம் தர வேண்டியது கடமை- நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கான ‘தொடுவானம்தேடி’ என்ற புத்தகத்தை பற்றி பேசும்போது, ‘குடும்ப நிர்வாகத்தை நடத்தும் மனைவிக்கு கணவர் மாத சம்பளம் கொடுக்க வேண்டும்’ என்று புதுயோசனை ஒன்றை தெரிவித்தார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் பேசியதாவது:- வேலைக்கு செல்லாமல் வீட்டை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு கணவர் சம்பளம் கொடுக்க வேண்டும். இது எப்படி சாத்தியம். அம்மாவுக்கும், மனைவிக்கும் எப்படி சம்பளம் தருவது என்று சிரிப்பார்கள். ஆனால் இது முடியும். நடக்க வேண்டிய வி‌ஷயம்.

காலையில் இருந்து இரவு வரை முழுக்க வேலை செய்யும் பெண்களால்தான் நாட்டின் ஜி.டி.பி. பொருளாதார வளர்ச்சியே நடக்கிறது. எனவே அதற்கு உறுதுணையாக இருக்கும் பெண்களுக்கு அதற்கான மரியாதை செலுத்துவதில் என்ன தப்பு. பெண்களை ஒட்டு மொத்தமாக வீட்டிலேயே இருக்க வைக்க வேண்டும் என்கிற ஆணாதிக்க சதி அல்ல இது. விருப்பத்தின் பேரில் வீட்டில் இருக்கும், வீட்டை கட்டிக் காக்கும் பெண்களுக்கு நாம் சம்பளம் தர வேண்டியது நமது கடமை.

நலிந்தோருக்கு நாளும் கிழமையும் இல்லை. பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இல்லை என்று எங்கோ படித்திருக்கிறேன். அப்படி விடுமுறை இல்லாமல் வேலை பார்க்கும் இல்லத்தரசிகளை கவனிக்க வேண்டியது நம் கட்டாய கடமை. பெண்களுக்கு உரிய மரியாதையை கணவன் தரவில்லை என்றாலும், அரசு தர வேண்டும். இது முடியும் என அவர் பேசினார்.