துபாயில் முதல் முறையாக யூத முறைப்படி அமெரிக்க தம்பதிக்கு திருமணம்

அமீரகம்-இஸ்ரேல் இடையே அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதால் பல்வேறு வகையில் இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விமான போக்குவரத்து, விசா நடைமுறைகள், பொருளாதாரம், வர்த்தகம், கப்பல் போக்குவரத்து என அடுத்தடுத்து இருநாடுகளும் நெருங்கிய நட்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக யூத முறைப்படி திருமணமானது அமீரகத்தில் நடைபெற்றுள்ளது. துபாயில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த தம்பதிக்கு யூதர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. யூதர்களின் முறைப்படி திருமணம், பொது விழாக்களில் ஆண், பெண் தனித்தனியே அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.

அதன்படியே இந்த திருமண விழாவிலும் இருதரப்பினரும் தனித்தனி குழுவாக பிரிந்து இருப்பதை காண முடிந்தது. இந்த திருமண விழாவில் மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவது, கட்டியணைப்பது, முத்தம் கொடுப்பது ஆகியவை இல்லாமல் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த தம்பதிக்கு யூத முறைப்படி திருமணம் நடந்ததை தொடர்ந்து பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்கள் இதேபோன்று யூத முறையில் திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.