அதிகபட்சமாக கொள்ளிடத்தில் மழையளவு பதிவு

சென்னை: அதிகபட்சமாக மயிலாடுதுறையில் கொள்ளிடத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்திருக்கிறது. 21 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் கொள்ளிடத்தில் 11 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.