கரூரில் படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய மெக்கானிக் கைது

கரூர்: கைது செய்த போலீசார்... டிடிஎப் வாசன் போல கரூரை சேர்ந்த பைக் பாண்டியன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்

கரூரைச் சேர்ந்த பைக் மெக்கானிக்கான பாண்டியன் என்ற இளைஞர் பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில் மொபட்டில் சுசுகி பைக்கின் என்ஜின் பாகங்களை பொறுத்தி ரேஸ் வாகனம் ஒன்றை தயார் செய்து கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் படுத்தவாறு சென்று, சாகசம் செய்து அதை செல்போனில் படம்பிடித்து முகநூலில் ரீல்ஸ் வெளியிட்டதாக கூறப்படுகின்றது

கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி முதல் வீரராக்கியம் பிரிவுக்குள் இதே போன்று பந்தயத்திற்காக வடிவமைக்கப்பட்ட தனது இரு சக்கர வாகனத்தில் பைக்கில் பாண்டியன் படுத்துக் கொண்டு லாரிகளுக்கு நடுவில் அதிவேகத்தில் செல்வதை வியப்புடன் பார்த்து, அந்த வழியாகச் காரில் சென்றவர்கள் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிவிரைவு பந்தயம் நடத்தப்படுவதாகவும், இதற்காக இரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பவர்கள் இது போன்ற பந்தய ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த பந்தயத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்த நிலையில் தற்போது இளைஞர்கள் மீண்டும் இரு சக்கர வாகனங்களில் பந்தய ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்தவகையில் பைக் பாண்டியனும். தன்னுடைய மொபட் பைக்குடன் பயிற்சியில் ஈடுபட்டு வீடியோவில் சிக்கியதாக சொல்லப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பைக் பாண்டியனின் பறக்கும் வித்தை காட்சிகளை வைத்து அவரை கைது செய்த கரூர் மாவட்ட போலீசார், மரணத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.