மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வந்தது. அதாவது கடந்த 10-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அளவு படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வினாடிக்கு 27 ஆயிரத்து 212 கனஅடியாக அதிகரித்தது.

தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 714 கன அடியாக குறைந்தது.

இந்த நீர்வரத்தானது, அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவான வினாடிக்கு 14 ஆயிரத்து 900 கனஅடியை விட குறையுமானால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.