கண்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதி விபத்து; மனைவி கண் எதிரே கணவன்-மகன் பலி

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது50). இவரது மகன் தவமணி. இவர்கள் இருவரும் மினி லாரியில் காய்கறிகளை பல்வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று விற்று வந்தனர். இதற்காக அதிகாலையிலேயே ஊரில் இருந்து புறப்படுவார்கள். பால்பாண்டி மனைவியும் அவர்களுடன் வியாபாரத்திற்கு செல்வது வழக்கம்.

இன்று அதிகாலை தக்காளி, வெங்காயம், பல்லாரி உள்ளிட்ட காய்கறிகளுடன் பால்பாண்டி குடும்பத்தினர் வியாபாரத்திற்கு புறப்பட்டனர். தவமணி டிரைவராக செயல்பட்டார். பால்பாண்டி அருகில் அமர்ந்திருந்தார். அவரது மனைவி மினி வேனின் பின் பகுதியில் காய்கறிகளுடன் உட்கார்ந்திருந்தார்.

திருமங்கலத்தில் டீ குடித்து விட்டு விருதுநகர் நோக்கி சென்றனர். திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் ராயபாளையம் விலக்கு பகுதியில் மினி லாரி சென்றபோது முன்னால் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

அந்த லாரி திடீரென வேகம் குறைந்து சாலையோரம் ஒதுங்கி உள்ளது. இதனை மினி லாரியை ஓட்டிச்சென்ற தவமணி சரியாக கவனிக்கவில்லை. அருகில் வந்த பிறகு தான் கண்டெய்னர் லாரி வேகம் குறைந்ததை தெரிந்து கொண்டு தனது வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி வேகமாக சென்று கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இதில் மினி லாரி முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மினி லாரியை வெளியே எடுத்தபோது பால்பாண்டி, தவமணி ஆகியோர் பலத்த காயத்துடன் இருக்கையிலேயே பிணமாகி இருந்தனர். அவர்களது உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் மினி லாரியின் பின்புறத்தில் இருந்த பால்பாண்டியின் மனைவி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.