வைரஸ் தடுப்பு அட்டையுடன் உலா வரும் அமைச்சர் செல்லூர் ராஜு

வைரஸ் தடுப்பு அட்டையுடன் வலம் வரும் அமைச்சர்... கொரோனாவில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கழுத்தில் வைரஸ் தடுப்பு அட்டையுடன் வலம் வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. வைகை அணையில் தெர்மகோல் விட்டு சர்ச்சைக்குள்ளானவரின் கழுத்தில் தற்போது தொங்கும் ஜப்பான் டெக்னிக் பற்றிதான் அதிக பேச்சாக உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ எங்கு சென்றாலும் கழுத்தில் நீல வர்ண அடையாள அட்டை போன்ற வைரஸ் தடுப்பு அட்டையை பயன்படுத்தி வருகின்றார். வைரஸ் ஷட் அவுட் என்ற பெயரில் ஜப்பான் நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ள இந்த வைரஸ் தடுப்பு அட்டையை அணிவதன் மூலம் 1 மீட்டர் சுற்றளவுக்கு வைரஸ் கிருமிகள் மூச்சுக்காற்றில் பரவுவதை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்க வந்த செல்லூர் ராஜூ, தனது கழுத்தில் இந்த வைரஸ் தடுப்பு அட்டையை கழுத்தில் அணிந்தபடி பங்கேற்றார். இந்த வைரஸ் தடுப்பு அட்டையில் இருக்கும் எட்டு துவாரங்களின் மேலுள்ள உறையை துளையிட்டு விட்டு, கழுத்தில் அடையாள அட்டை போல மாட்டிக் கொண்டால் போதும். இந்த அட்டைக்குள் பவுடர் போல நிரப்பப்பட்டுள்ள குளோரின் டை ஆக்ஸைடு காற்றில் பரவி கிருமிகளை தடுக்கும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

இந்த அட்டை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே உலக அளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டாலும், அமேசானில் கடந்த மாதம் முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த வைரஸ் தடுப்பு அட்டையின் விலை, குறைந்தபட்சம் 150 ரூபாய் முதல் அதிகபட்சம் 1500 ரூபாய். பயன்பாட்டு நாட்களுக்கு ஏற்ப, விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

பெரும்பாலும் இது போன்ற அட்டைகள் அதிக நபர்கள் கூடும் இடத்திலோ அலுவலகங்களிலோ உதவியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. முகக்கவசம் அணிந்து கையை சானிடைசரால் கழுவி கூடுதல் பாதுகாப்புக்கு இந்த அட்டையையும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

இந்த தடுப்பு அட்டை, வைரஸ் நெருங்க விடாமல் தடுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், கொரோனா வைரஸை நெருங்கவிடாமல் தடுக்குமா? என்பதற்கு எந்தவிதமான ஆராய்ச்சி பூர்வமான நிரூபணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.