சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என மாநில சுகாதார துறை அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அடுத்ததாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

கொரோனா தடுப்பு ஆலோசனையில் கலந்து கொண்ட இவருக்கு கொரோனா தொற்று பரவியதாகவும், அதன் காரணமாக அவர் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தனக்கு கொரோனா இல்லை என்றும் தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவும் இல்லை, தனிமைப்படுத்தப்படவும் இல்லை என அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு என்ன உடல் கோளாறு என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற தகவல் வேகமாக பரவியது. இந்த அச்சம் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. இதனை சுகாதாரத்துறை அலுவலகமும் இதனை தெரிவித்துள்ளது.