தமிழகத்தில் தான் வெளிப்படையான கலந்தாய்வு நடக்கிறது; அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடந்துள்ளது. விரிவான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்த்துறை செய்திருக்கிறது. இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். பெற்றோரும், மாணவர்களும் கண்ணீர் மல்க தங்களது நன்றியை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

பின்னர் மருத்துவ படிப்பில் சேர வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பித்திருப்பதாக புகார் எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில்,

கலந்தாய்வை பொறுத்தமட்டில், ஏற்கனவே வெளிப்படை தன்மையுடன் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. யார் என்ன ரேங்க்? என்று எளிதாக பார்த்துவிடலாம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வெளிப்படையான கலந்தாய்வு நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி போட்டியில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இருப்பிட சான்றிதழ் என்பது குறைந்தபட்சம் இங்கே 7 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும், அதற்கான சான்றிதழ் பெற, பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இதையெல்லாம் ஆய்வு செய்யத்தான் கொரோனா காலத்திலும் இந்த கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது. 0.0001 சதவீதம் கூட பிரச்சனை நடந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். மருத்துவர் ஆவது எனும் கனவை ஏழை-எளிய மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் நிஜமாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். மாணவர், பெற்றோர் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்டு இந்த மேலான நடவடிக்கையை அவர் செய்திருக்கிறார். கூலி தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.