அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அமைச்சரின் பதில்

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அம்மா நகரும் நியாய விலை கடை தொடக்க விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நடமாடும் நியாயவிலைக் கடை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெல்லமண்டி நடராஜன் கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். விவசாயியான அவர் தற்போது முதல்வராக உயர்ந்துள்ளார். தலைமை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு எடுப்பார்கள் அந்த முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம்.

முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அவருடைய சொந்தக் கருத்து அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை எனக் கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சசிகலா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நகரும் நியாய விலை கடையில் ஒரு விற்பனையாளர், டிரைவர் உள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடமாடும் கடையை செயல்படும். திருச்சியை பொருத்தவரை ஏற்கனவே துறையூர் அருகில் உள்ள பச்சைமலை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நடமாடும் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.