பாடசாலைகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்வி அமைச்சசு தகவல் நாளை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் 5, 11, 12, 13 ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர் என கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் 5, 11, 12 மற்றும் 13 ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவொருபுறமிருக்க, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை தயார்படுத்துவதற்காக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.