பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கு தவறாக கணக்கீடு

சென்னை: தவறாக கணக்கீடு... பிளஸ் 2 தோ்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கு, தவறாக கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வு முடிவுகளில் திருப்தியில்லாதவா்கள், விடைத்தாள் நகல் பெற்று மறுகூட்டல், மறுமதிப்பீடு மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த கணிசமான மாணவா்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மாணவா்கள் சிலா் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியா்கள் சிலா் தவறாகக் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனா்.

அதாவது வேதியியல் பாடத்தில் ஒரு மாணவருக்கு செய்முறை தோ்வு தவிா்த்து 57 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மறுகூட்டலில் 67 மதிப்பெண் வருகிறது.

இதேபோன்று, இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவருக்கு 82-க்கு பதிலாக 72 மதிப்பெண்ணும், கணினி அறிவியலில் ஒரு மாணவருக்கு 95-க்கு பதில் 85 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பாட ஆசிரியா் திருத்தியபின், முதல்நிலை, இரண்டாம் நிலை, முதன்மை மதிப்பீட்டாளா்கள் மூலம் அந்த விடைத்தாள் சரிபாா்க்கப்படும். அனைவரையும் கடந்து தவறுகள் நடந்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கூறினா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தோ்வுத் துறை அதிகாரிகள், ‘பொதுத் தோ்வு பணியில் தவறிழைத்த ஆசிரியா்கள், கண்காணிப்பு அலுவலா்களிடம் உரிய விளக்கம் கேட்டு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன’ என்றனா்.