பெரும்பான்மையுடன் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார்

புதுடில்லி: மீண்டும் மோடிதான் பிரதமர்... எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள போதும் முழு பெரும்பான்மையுடன் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

டெல்லி அவசர சட்ட மசோதா குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விளக்கமளித்து பேசிய அவர், டெல்லிக்கான சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கும் விதிகள் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியே மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பண்டித நேரு, சர்தார் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் ஆகியோர் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதை எதிர்த்ததாக அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகள், கூட்டணியை பற்றி சிந்திக்காமல், தலைநகர் டெல்லியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டெல்லியில் 2015-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற ஆம் ஆத்மி அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும், தங்கள் ஊழலை மறைக்கவே அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாகவும் அமித்ஷா விமர்சித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிரஞ்சன் சவுத்ரி, தங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் நேருவின் பெயரை பா.ஜ.க. பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.