பருவமழை முன்னெச்சரிக்கை.. தினமும் 600 இடங்களில் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க உத்தரவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 600 இடங்களில் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்று அதன் மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் தெரிவிப்பு .... வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் தலைமையில், வாரிய தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.இதையடுத்து இக்கூட்டத்தில் மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் பேசியதாவது:

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் தரத்தைஉறுதிசெய்வதற்காக நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் குடிநீரின் மாதிரி சேகரிப்பு600 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.


குடிநீரில் குளோரின் அளவு மற்றும் அதில் கலந்துள்ள திடப்பொருட்களின் அளவை (TDS), நாளொன்றுக்கு 2 ஆயிரம் மாதிரிகள் சேகரித்து பரிசோதிக்கப்படுகிறது. அதனை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வதற்காக நாள்தோறும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும்.குடிநீர் விநியோக நிலையங்களுக்குத் தேவையான பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்புபோன்றவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும்.

மேலும் கழிவுநீர் அடைப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, தூர்வாரும் இயந்திரங்கள், பெரிய ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் சிறிய ஜெட்ராடிங் இயந்திரங்கள், ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தமுள்ள 537 இயந்திரங்களும் தயார்நிலையில் வைக்கப்பட வேண்டும். மழைக்காலங்களில் கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளைசீர் செய்ய அனைத்து களப்பணியாளர்களும் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில்திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடம் இருந்து தொலைபேசி மூலமாகவோ, நேரிடையாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பெறக்கூடிய குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீரின் தரம் பற்றி பொதுமக்களிடமிருந்து குறைகள் தெரிவிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிக அளவில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.