குவைத்தில் சிக்கி தவிக்கும் 100க்கும் அதிகமான தமிழக தொழிலாளர்கள்

குவைத்தில் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்... குவைத்தில் துறைமுக நிறுவனத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். தங்களை, தமிழகத்திற்கு மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

குவைத்தில் சொய்பா துறைமுகத்தில் அகமது அல்தாரிக் சன்ஸ் என்ற சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த 107 பேர் பணியாற்றுகின்றனர். அந்த நிறுவன உரிமையாளர் மறைவுக்கு பிறகு நிறுவனம் நஷ்டமடைந்தது. கொரோனா பாதிப்பினால் சில மாதங்களாக தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது.

தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வாடகை கட்டடத்திற்கு நிறுவனம் 4 மாத பாக்கி தராததால் மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அடிப்படை தேவைகளுக்கும், உணவின்றியும் தவித்து வருகின்றனர். அங்கு பணியாற்றும் பட்டுக்கோட்டை சரவணன் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்தவர்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம், இதுவரை பணியாற்றியதற்கான செட்டில்மென்ட் தொகை என எதுவும் வழங்காமல் உள்ளனர்.

அவர்களின் விசாவும் புதுப்பிக்கப்படாததால் சட்டபிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. குடிநீரின்றி, உணவின்றி தவிப்பதை அறிந்த குவைத்தில் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகள் கடந்த சில தினங்களாக உணவு, குடிநீர் வழங்கி வருகின்றன. எங்களை சொந்த ஊருக்கு மீட்டுச் செல்ல மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்.

இங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். எனவே இந்திய அரசு துாதரகம் மூலமாக எங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.