பள்ளிகளை திறப்பதற்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் எதிர்ப்பு; பள்ளிக்கல்வித்துறை தகவல்

பள்ளிகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்கும்படி அரசு உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறியிருப்பதாவது:- பள்ளிகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.