தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக தலைவர் முருகன் உட்பட 500 பேர் கைது

தடையை மீறிய 500 பேர் கைது... திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரையை நடத்திய பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெற இருந்த வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், திட்டமிட்டபடி, வேல்யாத்திரை நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்ய காவல்துறையினரிடம் அனுமதி கோரினார்.

காவல்துறையினரும் 5 வாகனங்களில் செல்ல மட்டுமே அனுமதியளித்தனர். அதன்படி, திருத்தணி சென்ற எல்.முருகன் திருத்தணி கோவிலில் தரிசனம் செய்து முடித்து விட்டு, திடீரென வேல்யாத்திரையை தொடங்கினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. வேல் யாத்திரைக்காக தயார் செய்யப்பட்ட வேனில் ஏறியபடி ஊர்வலம் தொடங்கியது.

நீலகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடியிடம், பாஜக வேல்யாத்திரை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சட்டம் தன் கடமையை செய்யும் என அவர் கூறியுருந்தார். இந்நிலையில், தடையை மீறி வேல்யாத்திரையை நடத்திய பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்தணியில் கைது செய்யப்பட்ட அவர்கள், தனியார் பள்ளி வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.