முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமையில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனை

தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு முந்தைய நாளான சனிக்கிழமையில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகி இருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும். இதனால் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி பதுக்குகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த ஒரே நாளில் மட்டும் 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மது விற்பனை ஆகிறது.

அதன்படி, முழு ஊரடங்குக்கு முந்தைய நாளான சனிக்கிழமை ஒரேநாளில் தமிழகத்தில் ரூ.250 கோடியே 25 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் சென்னை மண்டலத்தில் ரூ.50 கோடியே 65 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.51 கோடியே 27 லட்சத்துக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.52 கோடியே 45 லட்சத்துக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.49 கோடியே 30 லட்சத்துக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46 கோடியே 58 லட்சத்துக்கும் விற்பனை ஆகியுள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை சுதந்திர தினம் வந்ததாலும், அதற்கு மறுநாள் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு என்பதாலும் 2 நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை ஆனது. ஆனால் இந்த வாரம் தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.250 கோடிக்கு மேல் விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த வாரத்தை காட்டிலும் அதிகம் ஆகும்.